வரசக்தி விநாயகர் கோவில் வருடாபிஷேகம்
வரசக்தி விநாயகர் கோவில் வருடாபிஷேகம் நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சோழமாதேவி கிராமத்தில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் 6-ம் ஆண்டு வருடாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமம் நடைபெற்றது. கடத்தில் விநாயக பெருமானை ஆவாஹனம் செய்து நடைபெற்ற ஹோமத்தின் முடிவில் கடத்தில் இருந்த புனிதநீரை கொண்டு பல்வேறு வாசனை திரவியங்களால் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக விநாயகப்பெருமான் வீதியுலா நடைபெற்றபோது பக்தர்கள் வீடுகள்தோறும் ஆராதனை செய்து வழிபட்டனர். விழாவையொட்டி இரவில் அரிச்சந்திரா நாடகம் நடைபெற்று வருகிறது. விழாவில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.