வயலூர் முருகன் உள்ளிட்ட 5 சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி


வயலூர் முருகன் உள்ளிட்ட 5 சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி
x

தைப்பூச திருவிழாவையொட்டி வயலூர் முருகன் உள்ளிட்ட 5 சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி

தைப்பூச திருவிழா

திருச்சியை அடுத்த வயலூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தைப்பூச திருவிழா நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தநிலையில் தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைந்த அளவே பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

5 ஊர் சுவாமிகள் சந்திப்பு

நேற்று முன்தினம் அதவத்தூரில் உள்ள உய்யகொண்டான் ஆற்றங்கரையில் முத்துக்குமாரசாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்று அங்கேயே தகரக்கொட்டகையில் இருந்து சுவாமி அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து வயலூர் வழியாக வரகாந்திடல் வந்தடைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து விட்டு வடகபுத்தூரில் தங்கிவிட்டு நேற்று 5 ஊர்களை சேர்ந்த சாமி சந்திப்பு கொடுக்கும் நிகழ்வுக்காக காலை 10.30 மணிக்கு சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

இதில் வயலூர் முத்துக்குமாரசாமி, உய்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாத சுவாமி, அல்லித்துறை பார்வதீஸ்வரர் சுவாமி, சோழங்கநல்லூர் காசி விஸ்வநாதர் சாமி, சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய 5 ஊர் சுவாமிகளும் சந்திப்பு கொடுத்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

அதன் பின்னர் 5 ஊர் சுவாமிகளும் முக்கிய வீதிகளில் வலம் வந்து சோமரசம்பேட்டை தைப்பூச மண்டபத்திற்கு வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணி வரை பக்தர்களுக்கு அருள் பாலித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு 4 ஊர் சுவாமிகள் அவரவர் கோவிலுக்கு சென்றனர். வயலூர் முத்துக்குமாரசாமி மட்டும் அதவத்தூர் கிராமத்தில் நேற்று இரவு தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்துவிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை அங்கிருந்து புறப்பாடாகி வயலூர் வந்தடைகிறார். இதற்கான பாதுகாப்பு பணிகளை புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில் ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன் தலைமையில் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின்படி தக்கர், உதவி ஆணையர் லட்சுமணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story