வேதநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம்

வேதநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
தொட்டியம்,மே.22-
தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் பிரசித்தி பெற்ற வேதநாராயண பெருமாள் சமேத வேதநாயகித் தாயார் கோவில் உள்ளது. வைணவத் தலங்களில் ஆதிரங்கம் என்றழைக்கப்படும் இக்கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் இதுவும் ஒன்று. இங்கு பெருமாள் இந்து மதத்தின் அளப்பறிய பொக்கிஷங்களான ரிக், யஜூர், சாம,அதர்வனஆகியநான்குவேதங்களைதலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இதனால், தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அள்ளித் தருகிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி தேரோட்ட விழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனங்களில் வேதநாராயண பெருமாள் உபயநாச்சியாருடன் புறப்பாடும், 19-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக பெருமாள் உபயநாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் தொடங்கியது. தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. பக்தர்கள் "கோவிந்தா" "கோவிந்தா" என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர்விஜயராணி,செயல்அலுவலர்அமரநாதன்மற்றும்ஊர்பொதுமக்களும் கோவில் பணியாளர்களும் செய்திருந்தனர்.






