தஞ்சையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு


தஞ்சையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 21 Jun 2023 1:47 AM IST (Updated: 21 Jun 2023 4:46 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் காய்கறி விலை உயர்ந்து பீன்ஸ், அவரைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

தஞ்சாவூர்

தஞ்சையில் காய்கறி விலை உயர்ந்து பீன்ஸ், அவரைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

காமராஜர் மார்க்கெட்

தஞ்சை அரண்மனை வளாகம் அருகே காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

இங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக்கொண்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் விற்பனைக்காக எடுத்துச்செல்வது வழக்கம். தஞ்சை மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, நிலக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும்.

பீன்ஸ், அவரைக்காய்

தற்போது சில காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால் விலை சற்று உயர தொடங்கி இருக்கிறது. வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-க்கு விற்பனை ஆனது. சில்லரை கடைகளில் ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் அவரைக்காயும் ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையானது.

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.50-க்கும், தக்காளி ரூ.40-க்கும், கத்தரிக்காய் ரூ.60, ரூ.80-க்கும், காலிப்பிளவர் ரூ.50-க்கும், கேரட் ரூ.70-க்கும், பீட்ரூட் ரூ.50-க்கும், சவ்சவ் ரூ.30-க்கும், மிளகாய் ரூ.80-க்கும், முருங்கை ரூ.30-க்கும் விற்பனையானது.

விலை அதிகமான காய்கறிகளை குறைவாகவும், விலை குறைவான காய்கறிகளை அதிகமாகவும் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

சின்ன வெங்காயம்-ரூ.90, இஞ்சி-ரூ.200-க்கு விற்பனை

தஞ்சைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து விடடது. மைசூரில் இருந்து சின்னவெங்காயம் வரத்து அடியோடு நின்று விட்டது. தமிழகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயம் தான் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை உயரத்தொடங்கி விட்டது. தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்பனையானது. இந்த விலை இன்னும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் தஞ்சையில் நேற்று ஒரு கிலோ இஞ்சி ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் இதை விட அதிகவிலைக்கு இஞ்சி விற்பனையானது. இதுகுறித்து வியாபாரி கூறும்போது, இஞ்சி விளையும் மேட்டுப்பாளையத்திலேயே விலை அதிகமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக போதிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இதனால் இஞ்சிக்கு தற்போது கிராக்கி ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது என்றார்.


Next Story