தர்மபுரி உழவர் சந்தையில் 36 டன் காய்கறிகள் விற்பனை


தர்மபுரி உழவர் சந்தையில் 36 டன் காய்கறிகள் விற்பனை
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி தர்மபுரி உழவர் சந்தையில் 36 டன் காய்கறிகளும், 3 டன் பழங்களும் விற்பனையானது.

தர்மபுரி

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி தர்மபுரி உழவர் சந்தையில் 36 டன் காய்கறிகளும், 3 டன் பழங்களும் விற்பனையானது.

காய்கறிகள் விற்பனை

புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலானோர் விரதம் இருந்து சாமிக்கு படையலிட்டு வழிபடுவார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் மார்க்கெட், உழவர் சந்தைகளில் அதிக அளவில் காய்கறிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையையொட்டி காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகளும், பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகள், பழங்களை வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் இங்கிலீஷ் காய்கறிகள் (அக்ரோ காய்கறிகள்) மற்றும் நாட்டு காய்கறிகள் என மொத்தம் 36 டன் காய்கறிகளும், 3 டன் பழங்களும் விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு ரூ.13 லட்சத்து 27 ஆயிரத்து 813 ஆகும்.

130 விவசாயிகள்

தர்மபுரி உழவர் சந்தைக்கு நேற்று 130 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் 7,868 பேர் காய்கறிகள் வாங்க உழவர் சந்தைக்கு வந்தனர். வழக்கமாக தர்மபுரி உழவர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 25 டன் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமை என்பதால் கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

வருகிற சனிக்கிழமை நாட்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன், மஞ்சுநாதேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

உழவர் சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் நேற்று வந்ததால் தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வரும் சனிக்கிழமை நாட்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story