கோத்தகிரியில் வாகன சோதனை: விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்
கோத்தகிரியில் போக்குவரத்து போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில் விதிகளை மீறிய 17 வாகன ஓட்டிகளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
கோத்தகிரி
கோத்தகிரியில் போக்குவரத்து போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில் விதிகளை மீறிய 17 வாகன ஓட்டிகளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாகன சோதனை
கோத்தகிரி பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் மீறாமல் தடுக்கும் வகையிலும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருவதுடன், விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்தில் குடிபோதையில் வாகனங்களை இயக்கிய 13 பேர் மீதும், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் இயக்கிய 4 பேர் மீதும், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி வழக்குப் பதிவு செய்திருந்தார்.
ரூ.1½ லட்சம்
இதையடுத்து இவர்கள் 17 பேரும் நேற்று கோத்தகிரி கோர்ட்டில் ஆஜராகினர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வனிதா, குடிபோதையில் வாகனங்களை இயக்கிய 13 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கிய 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் கோர்ட்டில் அபராதத் தொகையை செலுத்தி விட்டு சென்றனர். இதன்படி நேற்று ஒரு நாளில் மட்டும் 17 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.