கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது


கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது
x

கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என குறைத்தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பத்தூர்

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தீபா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன், வேளாண்மை உதவி இயக்குனர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

கொள்முதல் நிலையம்

வனவிலங்குகளால் விளைநிலங்கள் சேதப்படுத்தப்படும்போது வனத்துறையினர் தன்னிச்சையாக முடிவு எடுத்து குறைந்த அளவு இழப்பீடு வழங்குகின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே வேளாண்மை துறையினரும், வனத்துறையினரும் சேர்ந்து விளைநிலங்களை பார்வையிட்டு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான முதியவர்கள் வருகின்றனர். அதனால் கலெக்டர் அலுவலகத்தின் இருபுறமும் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம், பருத்தியில் இருந்து விதைகளை பிரித்து எடுக்கும் ஆலை ஆகியவற்றை அமைக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கட்டணம் வசூலிக்கக்கூடாது

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கூடுதலாக யூரியா வழங்க வேண்டும். ஆம்பூர் தாலுகா கைலாசகிரி ஊராட்சியில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். ஏழருவி பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியின் வழியாக கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது.

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. மணல் திருட்டின் காரணமாக பாலாற்றின் வளம் குறைந்துவிட்டது. மழை பெய்தாலும் நீர்நிலைகள் நிரம்பவில்லை. வாணியம்பாடி பகுதியில் உள்ள நாகல் ஏரி, பள்ளிப்பட்டு ஏரி, உதயேந்திரம் ஏரி, கொடையாஞ்சி ஏரி, ஆம்பூர் பகுதியில் உள்ள விண்ணமங்கலம் ஏரி, மின்னூர் ஏரி ஆகியவற்றில் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது. கால்வாய் பகுதிகள் மேடாக உள்ளதால் தண்ணீர் வர வாய்ப்பில்லை. பாலாறு பள்ளத்திற்கு சென்று விட்டது. இதை கலெக்டர் ஆய்வு செய்து பருவமழையின்போது அனைத்து நீர்நிலைகளும் நிரம்ப வழிவகை செய்ய வேண்டும். ஊராட்சி இணை இயக்குனரிடம் எந்த கோரிக்கை வைத்தாலும் நடவடிக்கை எடுப்பது கிடையாது. அவரிடம் மனு கொடுத்த எந்த பயனும் இல்லை.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.


Next Story