பாதையை ஆக்கிரமித்த வாகனங்கள்; மாற்றுத்திறனாளிகள் அவதி
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் பாதையை ஆக்கிரமித்தபடி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் பாதையை ஆக்கிரமித்தபடி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கலெக்டர் அலுவலகம்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் அருகே 61.42 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2015-ம் ஆண்டு புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு ஜூன் 2-ந்தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தஞ்சை கோர்ட்டு சாலையில் செயல்பட்டு வந்த பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அலுவலகங்கள் புதிய கலெக்டர் அலுவலகத்துக்கு இடம் மாற்றப்பட்டன.
இதன் காரணமாக பல்வேறு பணிகளுக்காகவும், சான்றிதழ்கள் பெறவும், மனுக்கள் கொடுக்கவும் ஏராளமான பொதுமக்கள் புதிய கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
சாய்வு தள பாதை
இதனால் அவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சாய்வு தள பாதை அமைக்கப்பட்டது. அந்த வழியாக மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று வந்தனர்.
குறிப்பாக வாரந்தோறும் திங்கட் கிழமை அன்று கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் அந்த பாதையால் மிகவும் பயனடைந்து வந்தனர்.
ஆக்கிரமித்த வாகனங்கள்
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மாற்றுத்திறளாளிகளுக்கான சாய்வு தள பாதையை ஆக்கிரமித்தபடி வாகனங்களை நிறுத்துவிட்டு செல்கின்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் அந்த வழியாக செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
மேலும், அவர்கள் படி வழியாக மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். ஒரு சில மாற்றுத்திறானிகள் உதவிக்காக பிறரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் பாதையை ஆக்கிரமித்தபடி வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும், இனி வரும் காலங்களில் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.