கந்தலான சாலையால் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் வாகனங்கள்


கந்தலான சாலையால் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் வாகனங்கள்
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:45 PM GMT)

ரிஷிவந்தியம் அருகே கந்தலான சாலையால், வாகனங்கள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்கின்றன. ஏதேனும் உயிரிழப்பு ஏற்படும் முன் சாலையை சீ்ரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

5 கிலோமீட்டர் தூரம்

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்டது மேல்சிறுவள்ளூர்-அருளம்பாடி செல்லும் சாலை. சுமார் 5 கிலோமீட்டர் தூரம் கொண்டது இந்த சாலை. குறிப்பாக மேல்சிறுவள்ளூர் பகுதியிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலை மட்டுமல்லாமல் இப்பகுதியில் இருக்கும் சிறு கிராமங்களான மங்கலம், ஈருடையாம்பட்டு, வடமாமாந்தூர், ஆற்கவாடி, அரும்பராம்பட்டு, சீர்பாதநல்லூர், ஜம்படை, திருவரங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாகவும் விளங்கி வருகிறது. மேலும் ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் முக்கிய சாலையாக இருந்து வருகிறது.

கந்தலாகி கிடக்கிறது

இதுமட்டுமின்றி இப்பகுதியில் பயிரிடப்படும் கரும்பு பயிர்களை அறுவடை செய்து அதனை டிராக்டர் மற்றும் கனரக வாகனங்களில் ஏற்றிக்கொண்டு மூங்கில்துறைப்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் விவசாயிகள் பெரிதளவில் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

இப்படி அதிகளவில் பயன்படுத்தப்படும் இந்த சாலை பலத்த சேதமடைந்து கந்தலாகி கிடக்கிறது. சாலை ஆங்காங்கே பெயர்ந்து பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து அடிக்கடி விபத்தை சந்திக்கின்றனர். மேலும் இந்த வழியாக செல்லும் பள்ளி-கல்லூரி பஸ்கள், நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளதால், கால தாமதம் ஏற்படுகிறது.

சீரமைக்கப்படுமா?

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயமும் உள்ளது. மழைக்காலங்களில் சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. ஆனால், இதுபற்றி அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே உயிரிழப்பு ஏதும் நிகழும் முன் சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.


Next Story