காற்றாலை இறக்கையை கொண்டு செல்லும் லாரிகளால் அணிவகுக்கும் வாகனங்கள்


காற்றாலை இறக்கையை கொண்டு செல்லும் லாரிகளால் அணிவகுக்கும் வாகனங்கள்
x

தேசிய நெடுஞ்சாலை வழியாக காற்றாலை இறக்கையை கொண்டு செல்லும் லாரிகளால் வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

கரூர்

அணிவகுத்து சென்ற வாகனங்கள்

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்குள்ள காற்றாலைகளுக்கு தேவையான மின்சார உதிரி பாகங்கள், காற்றாலை இறக்கை, எந்திரம் உள்ளிட்டவை வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படுகிறது. அதன்படி பெங்களூரு பகுதியில் இருந்து நேற்று சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை பகுதிக்கு சுமார் 320 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கைகளை ராட்சத லாரிகளில் ஏற்றிக்கொண்டு, கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே வந்தது. தவுட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று கொண்டிருப்பதால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

பழைய போலீஸ் சோதனை சாவடி நெடுகிலும், குண்டும், குழியுமாக சர்வீஸ் சாலை செல்வதால் அதிக நீளமான காற்றாலை விசிறி இறக்கைகளை ராட்சத லாரியில் கொண்டு செல்லும்போது காற்றாலை விசிறி இறக்கையுடன் லாரி நீண்ட நேரம் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அதன் காரணமாக மிகவும் நீளமான இறக்கைகளை லாரிகளில் கொண்டு செல்வதால் நீண்ட நேரம் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து பாலத்துறை மேம்பாலம் வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு செல்லும் லாரிகள் இரவு முழுவதும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தி வைத்துவிட்டு மறுநாள் பகல் 12 மணிக்கு மேல் இந்த சாலை வழியாக செல்கின்றன. பகல் நேரங்களில் இந்த வாகனங்கள் செல்வதால் அடிக்கடி தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு செல்லும் லாரிகளை இரவு நேரங்களில் கொண்டு செல்ல வேண்டும்.

பகலில் கொண்டு செல்வதால் பின்னால் வரும் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இறக்கைகளை கொண்டு செல்லும் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story