நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்


நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்
x
தினத்தந்தி 30 Aug 2023 8:00 PM GMT (Updated: 30 Aug 2023 8:00 PM GMT)

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

ஓணம் பண்டிகை

மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவை, நீலகிரி உள்பட கேரள மாநில எல்லையை ஒட்டிய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதலே ஊட்டிக்கு கேரள சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது. மேலும் வருகிற 3-ந் தேதி வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட வரிசையில் வாகனங்கள்

இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் முக்கிய சாலைகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் நடமாட்டமே இருந்தது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்பட பல இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. மேலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதை காண முடிந்தது. இதன் காரணமாக நெரிசலை சமாளிக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி கூடலூரில் இருந்து வரும் வாகனங்கள் பிங்கர்போஸ்ட் சிக்னலில் இருந்து வலதுபுறம் திரும்பி படகு இல்லம் வழியாக ஊட்டி நகருக்குள் அனுப்பப்பட்டது.

நெரிசல் குறைந்தது

இது தவிர மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக வரும் வாகனங்கள் மஞ்சனக்கொரை, பஸ் நிலையம் வழியாக ஊட்டி நகர் பகுதிக்குள் அனுப்பப்பட்டன. இதனால் நேற்று முன்தினத்தை விட நேற்று போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

அதே சமயத்தில் உள்ளூர் வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்படாததால் அவர்கள் வழக்கம்போல் சென்று வந்தனர்.


Next Story