ராணிப்பேட்டை பாலாறு பழைய பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தம்
ராணிப்பேட்டை பாலாறு பழைய பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை பாலாறு பழைய பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
தோல் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த ராணிப்பேட்டைக்கு நாள்தோறும் ஆற்காடு, கலவை, திமிரி, புதுப்பாடி, மேல்விஷாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கில் தொழிலாளர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ராணிப்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுவது வழக்கமாகும்.
பாலாற்றை கடந்து ஆற்காடு நோக்கி செல்ல பழைய மற்றும் புதிய பாலம் என இரு பாலங்கள் உள்ளன. பழைய பாலத்தில் ஏற்கனவே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறுத்தம்
இந்த நிலையில் ராணிப்பேட்டையில் இருந்து பழைய மேம்பாலத்தின் வழியாக வந்து ஆற்காட்டில் கீழே இறங்கும் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பழைய மேம்பாலத்தின் வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் பாலத்தில் இருந்து இறங்கும் பகுதியில் பாதை மாறும் போது ஏற்படும் குழப்பத்தால் அதிக அளவில் வாகன விபத்துகள் நடைபெறுகிறது.
கடந்த சில நாட்களாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விபத்துகளை தடுக்க பழைய மேம்பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சர்வீஸ் சாலையில் பயணித்து புதிய மேம்பாலம் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் அதிகளவில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.