வேளாங்கண்ணி பாதயாத்திரை குழுவினரிடம் செல்போன் திருடியதால் அடித்துக்கொலை
செம்பனார்கோவில் அருகே தொழிலாளி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. வேளாங்கண்ணி பாதயாத்திரை குழுவினரிடம் செல்போன் திருடியதால் அடித்துக்கொல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
திருக்கடையூர்:
செம்பனார்கோவில் அருகே தொழிலாளி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. வேளாங்கண்ணி பாதயாத்திரை குழுவினரிடம் செல்போன் திருடியதால் அடித்துக்கொல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
உடலில் காயங்களுடன்...
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள மேலபெரும்பள்ளம் கீழத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி கவுசல்யா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 27-ந் தேதி கருவிழந்தநாதபுரம் மெயின் ரோடு அருகே உள்ள திடலில் இளங்கோவன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சந்தேக மரணம்
இதுகுறித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியதுடன், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின் பேரில் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அடித்துக்கொலை
விசாரணையில் இளங்கோவன் செல்போன் திருடியதால் அடித்துக்கொல்லப்பட்டது தெரிய வந்தது. சம்பவத்தன்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணி திருவிழாவுக்கு பாதயாத்திரையாக சென்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்கள் செம்பனார்கோவில் அருகே கருவிழந்தநாதபுரம் மெயின்ரோடு அருகே உள்ள ஒரு திடலில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் 'பவர் பேங்கை' இளங்கோவன் திருடிக் கொண்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். உடனே விழித்துக்கொண்ட அவர்கள் இளங்கோவனை விரட்டி பிடித்து செல்போன் மற்றும் பவர் பேங்கை கைப்பற்றியதுடன், அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளங்கோவன் இறந்தது தெரிய வந்தது.
6 பேர் கைது
இதுதொடர்பாக செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தை சேர்ந்த வடிவேல் மகன் பொன்னிவளவன்(19), நாகராஜ் மகன் தினேஷ்கரன்(20), முருகேசன் மகன் வெற்றிவேல்(19), சிவலிங்கம் மகன் சுகுமார்(19), காசிராஜன் மகன் பாலசுப்பிரமணியன்(25), தென்னாம்பாக்கத்தை சேர்ந்த காத்தவராயன் மகன் முத்துகமலேஷ்(20) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் திருச்சம்பள்ளி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கனிமொழி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத்தொடர்ந்து அனைவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.