வேலூர்: அடிபம்பு மீது கான்கிரீட் கலவை போட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து


வேலூர்: அடிபம்பு மீது கான்கிரீட் கலவை போட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து
x

அடிபம்பு மீது கான்கிரீட் கலவை போட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பணியை கவனிக்காத மாநகராட்சி உதவி பொறியாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர்:

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி சைதாப்பேட்டையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை அகற்றாமல் அதன் மீது சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இதேபோல சாய்நாதபுரத்திலும் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த சம்பவங்கள் சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நெட்டிசன்களால் மாநகராட்சி குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்தநிலையில் சத்துவாச்சாரி விஜயராகபுரம் 2-வது தெருவில் கால்வாய் அமைக்கும் பணி சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அப்போது அந்த தெருவில் ஓரமாக இருந்த அடிபம்பு ஒன்று அகற்றப்படாமல் அதன் மீது காங்கிரீட் கலவை போடப்பட்டது.

இதனால் அடிபம்பு பாதியளவு கால்வாய்க்குள் புதைந்தது. அந்த அடிபம்பு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த அடிபம்பை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான செய்தி தினத்தந்தி நாளிதழின் புகார் பெட்டியில் படத்துடன் வெளியானது.

இதையடுத்து மாநகராட்சியின் நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளங்களில் பலர் கேலியாக தங்களது கருத்துகளை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த அடிபம்பு இன்று அகற்றப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, பணியை கவனிக்காத மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வாராஜிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வாறு பணியில் கவனக் குறைவாக இருந்த ஒரு அதிகாரியும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என கூறினார்.


Next Story