இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் கைது


இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் கைது
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியதாக இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியதாக இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் கைது செய்யப்பட்டார்.

போலீசில் புகார்

தமிழகம் முழுவதும் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கூட்டம் ஆரணி அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் கோ.மகேஷ் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆரணி நகர தி.மு.க. செயலாளரும், நகரமன்ற தலைவருமான ஏ.சி.மணி ஆரணி டவுன் போலீசில் நேற்று புகார் ெகாடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோட்ட தலைவர் கைது

இதையடுத்து ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வேலூரில் உள்ள இந்து முன்னணி கோட்ட தலைவர் கோ.மகேஷ் வீட்டுக்கு இன்று அதிகாலை சென்று அவரை கைது செய்தனர்.

இதையடுத்து சந்தவாசல் போலீஸ் நிலையத்துக்கு அவரை அழைத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி பகுதியில் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பின்னர் இந்து முன்னணி கோட்ட தலைவர் கோ.மகேசை ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

சிறையில் அடைக்க உத்தரவு

அப்போது நீதிபதி கார்த்திகேயன் மகேசை வருகிற 9-ந் தேதி வரை 14 நாட்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் அவரை வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் ஆரணி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story