வேலூர் புதிய பஸ்நிலையம் பயணிகள் கூட்டத்தால் திணறியது


வேலூர் புதிய பஸ்நிலையம் பயணிகள் கூட்டத்தால் திணறியது
x
தினத்தந்தி 2 July 2023 4:33 PM GMT (Updated: 3 July 2023 9:27 AM GMT)

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல, வேலூர் புதிய பஸ்நிலையத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் பஸ்நிலையம் திணறும் நிலை ஏற்பட்டது.

வேலூர்

பயணிகளால் திணறியது

திருவண்ணாமலையில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்காக தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் செல்கின்றனர். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் நேற்று மாலை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

இதனால் புதிய பஸ்நிலையத்தில் காட்பாடி செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் கூட்டம் அலைமோதியது. பஸ்கள் பஸ்நிலையத்தின் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் காட்பாடி சாலையிலும், பஸ் நிலையம் உள்ளேயும் நிரம்பி இருந்தது. இதனால் திருவண்ணாமலை செல்லும் பஸ்களில் இருந்து இறங்க முடியாமலும், ஏற முடியாமலும் பயணிகள் திணறினர்.

போக்குவரத்து நெரிசல்

பஸ் நிலையம் மட்டுமின்றி கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து காட்பாடி செல்ல திரும்பும் சாலையில் நின்றும் பயணிகள், பஸ்களில் ஏர முண்டியடித்தனர். இதனால் காட்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தமிழ் தெரியாத வெளிமாநில பக்தர்கள், எங்கே நின்று திருவண்ணாமலை பஸ்களில் ஏறுவது என தெரியாமல் திணறினர்.

போலீசார் நடவடிக்கை

இதனால் பணியில் இருந்த காவலர்கள் மூலம் கூடுதல் போலீசார் மற்றும் போக்குவரத்து காவலர்கள், வரவழைக்க பட்டனர். பயணிகளை சாலையில் நின்று பஸ்களில் ஏற்ற கூடாது என்றும், திருவண்ணாமலை செல்லும் பஸ்களில் பெயர் பலகைகள் மறைக்க பட்டன. இதனால் சாலைகளில் நின்ற பயணிகள் கூட்டம் குறைய தொடங்கியது.

கடந்த முறை பவுர்ணமியின் போதும் புதிய பஸ் நிலையத்தில் இதே போன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் செல்லும் நாட்களில், போலீசார் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story