இரவு நேரங்களில் கனமழை:ஏற்காட்டில் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஏற்காட்டில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கு கடும் குளிர் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம்
ஏற்காட்டில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கு கடும் குளிர் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிர்
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் எடப்பாடி, மேட்டூர், ஏற்காடு, ஓமலூர் உள்ளிட்ட பல இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ஏற்காட்டில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை. மழை காரணமாக ஏற்காடு கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மலை பாதைகளில் ஆங்காங்கே உள்ள நீர்வீழ்ச்சிகளில தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
51 மில்லி மீட்டர் மழை
இந்த இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி எடப்பாடியில் 51 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
மேட்டூர்-24.20, ஏற்காடு-23.60, ஓமலூர்-10.20, ஆனைமடுவு -8, சங்ககிரி-20, காடையாம்பட்டி-1 ஆகும்.