மிக கனமழை எச்சரிக்கை:நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வருகை-456 பாதுகாப்பு மையங்கள் தயார்
மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரிக்கு வந்துள்ளனர்.
ஊட்டி
மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரிக்கு வந்துள்ளனர்.
மிக கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நேற்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ஊட்டியில் நேற்று 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 89 சதவீதம் இருந்தது. நீலகிரியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை அளவு படிப்படியாக அதிகரித்து பெய்து வந்தது.
நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து கமாண்டன்ட் பிரவீன் எஸ் பிரசாத் தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 43 பேர் நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தனர். அவர்கள் ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் இரு பிரிவாக பிரிந்து பணியாற்ற உள்ளனர்.
முன்னதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மலை பாதிப்புகளை சமாளிப்பது குறித்த முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
283 இடங்கள்
தென்மேற்கு பருவமழை தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதியினை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க ஏதுவாக, 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது.
மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 3,500 முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் 200 பேரிடர் கால நண்பர்களுக்கு பேரிடர் பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, ஆர்.டி.ஓ. துரைசாமி, தாசில்தார் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.