கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரதம்


கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரதம்
x

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தஞ்சையில் கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

கால்நடை ஆய்வாளர்கள்

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரதப்போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு தஞ்சை மாவட்ட செயலாளர் முத்துராஜா தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் ராஜா, குருநாதன், கோவிந்தராஜன், கோட்ட செயலாளர்கள் சந்துரு, முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன் (திருவாரூர்), சங்கர் (நாகை) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். உண்ணாவிரதப்போராட்டத்தை மாநில செயலாளர் தமிழ்வாணன் தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் ஆறுமுகம் முடித்து வைத்து பேசினார்.

காலிப்பணியிடங்கள்

உண்ணாவிரதப்போராட்டத்தில், கால்நடை ஆய்வாளர் பயிற்சியை தொடங்கி கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 6-வது ஊதியக்குழுவில் வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை பெற்றிட சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கினை சங்க கோரிக்கையின் வழி அமல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் பணியாற்றுகின்ற அரசு ஊழியர்களுக்கு தி.மு.க அரசு ஆட்சிக்கு வரும் போது தெரிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த வேண்டும். கால்நடை ஆய்வாளர் சங்க நீண்டநாள் கோரிக்கையான முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்தக்கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்

இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கால்நடை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணிஜெயந்தி நன்றி கூறினார்.


Next Story