சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் வழியாக அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும்


சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் வழியாக  அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும்
x

சேந்தமங்கலம் பழைய பஸ்நிலையம் வழியாக அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

புதிய பஸ்நிலையம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சிறந்த ஆன்மிக தலமாக விளங்கி வருகிறது. இங்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக காமராஜர் பெயரில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அந்த பஸ் நிலையம் ஒரே நேரத்தில் 3 பஸ்கள் மட்டுமே நிற்கும் வகையில் சிறிய அளவிலான பஸ் நிலையமாக செயல்பட்டு வந்தது. அதை சுற்றியும் 40-க்கும் மேற்பட்ட வியாபார கடைகள் இயங்கி வந்தன.

காலப்போக்கில் மக்கள்தொகை அதிகமானதால் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மேலும் பஸ்கள் இயக்கமும் அதிகமானது. அதைத்தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் வண்டிப்பேட்டை அருகே ரூ.1 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அதில் 12 வணிக கடைகள் அமைத்து கொள்ள அறைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் அந்த பஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் ஆர்வமாக செல்லாமல் இருந்து வருகின்றனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இது குறித்து கட்டிட மேஸ்திரி ராஜாங்கம் கூறியதாவது;-

சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையத்திற்குள் தற்போது பஸ்கள் வராததால் அங்குள்ள வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புகார் சென்றதின் அடிப்படையில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு சில பஸ்களை பழைய பஸ் நிலையம் வழியாக, புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல ஏற்பாடு செய்தனர்.

ஆனால் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நுழைவுவாயில் பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுவதால் அங்கு பஸ்கள் செல்ல முடியவில்லை என காரணம் காட்டி பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே அந்த குறையை நீக்கி பழைய பஸ் நிலையம் வழியாக அனைத்து பஸ்களும் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் பழைய பஸ்நிலையம் அருகில் குடியிருப்போருக்கு வசதியாக இருக்கும்.

மேலும் சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தரமாக இல்லை. குளோரின் அதிகமாக கலக்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வினியோகிக்கப்படும் நீரில் குளோரின் அளவு குறைவாக கலக்கப்பட வேண்டும். மேலும் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையை சீரமைக்க வேண்டும்.

காலியாக உள்ள கடைகள்

பெயிண்டர் பொன்மணி:-

சேந்தமங்கலம் புதிய பஸ் நிலையம் தொடங்கப்பட்டு சுமார் 6 ஆண்டுகள் ஆகிறது. அங்கு பேரூராட்சி மூலம் கட்டப்பட்ட 12 கடைகளில் சுமார் 5 கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது. மற்ற கடைகள் காலியாகவே இருக்கிறது. பொதுமக்கள் புதிய பஸ் நிலையத்திற்கு அதிக அளவில் வந்து செல்லாததே இதற்கு காரணமாக இருக்கிறது.

மேலும் சேந்தமங்கலம் வண்டி பேட்டையில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி வரை பஸ் நிறுத்தங்கள் அதிக அளவில் காணப்படுவதால் பொதுமக்கள் ஆங்காங்கே இறங்கியும், ஏறிக்கொண்டும் வருகின்றனர். சேந்தமங்கலம் புதிய பஸ் நிலையம் வழியாக அரசு பஸ்கள் 25, தனியார் பஸ்கள் 25 என்று ஒவ்வொரு நாளும் சென்று வருகிறது. பொதுமக்கள் புதிய பஸ் நிலையத்திற்கு அதிக அளவில் வந்து சென்றால் தான், அங்குள்ள வியாபார கடைகள் அனைத்தும் இயங்கும். எனவே அதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story