ஊட்டியில் இன்று துணைவேந்தர்கள் மாநாடு..!
ஊட்டியில் இன்று துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் ஆர்.என்.ரவி நடத்துகிறார்.
ஊட்டி,
மத்திய அரசு புதிய தேசிய கல்விக்கொள்கையை கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதில் பல அம்சங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில் புதிய தேசிய கல்விக்கொள்கை பற்றி ஆலோசனை செய்ய நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று (திங்கட்கிழமை) துணை வேந்தர்கள் மாநாட்டை கவர்னர் ஆர்.என்.ரவி நடத்துகிறார். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கவர்னர், பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் புதிய தேசியக் கல்விக்கொள்கை பற்றி ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டியில் உள்ள முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து வருகிற 9-ந் தேதி வரை ஊட்டியில் தங்கி இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். பின்னர் 9-ந் தேதி ஊட்டியில் இருந்து சென்னை திரும்புகிறார். ஊட்டியில் கவர்னர் வருகையையொட்டி 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.