பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்
திருவண்ணாமலையில் பவுா்ணமியொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் பவுா்ணமியொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபாடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்.
இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று மாலை சுமார் 6.47 மணியளவில் தொடங்கியது. இதையொட்டி இன்று விடுமுறை நாள் என்பதால் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
பகலில் மிதமான வெயில் கொளுத்தியது. இருப்பினும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
சாமி தரிசனம்
பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.50 கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அறநிலையத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
ஆனால் பகலில் கோவிலில் சாமி தாிசனம் செய்ய வந்த பக்தர்களிடம் இருந்த கட்டண தரிசன டிக்கெட் ரூ.50 வசூலிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து புகார்கள் எழுந்ததை தொடர்ந்து மதியத்திற்கு மேல் ரூ.50 கட்டணம் தாிசனம் வசூலிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் பக்தர்கள் அனைவரும் பொது தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் நீண்ட பொது தரிசனம் வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
பக்தர்கள் கிரிவலம்
மாலை சுமார் 5 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்தனர்.
பவுர்ணமி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 வரை உள்ளதால் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கிரிவலப்பாதையில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.