மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை: 1,741 வழக்குகள் பதிவு
கரூர் மாவட்டத்தில் குற்றத்தடுப்பு, வாகன விபத்தை குறைக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு 1,741 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
தீவிர வாகன சோதனை
கரூர் மாவட்டம் முழுவதும் நேற்றுமுன்தினம் இரவு சிறப்பு ரோந்து பணியாக குற்றத்தடுப்பு மற்றும் வாகன விபத்து குறைப்பது தொடர்பாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுப்படி, போலீசார் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள், மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் 1,741 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 34 நம்பர் போர்டு இல்லாத மற்றும் போலியான நம்பர் போர்டு உள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 41 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க வேண்டி முக்கியமாக 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனத்தை ஓட்டி சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்க வேண்டி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை செய்து 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறுவர்களின் பெற்றோர்கள் 65 பேரை நேரில் அழைத்து அறிவுரை வழங்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் 27 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
27 பேர் கைது
முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் மூலம் 51 பேர் சோதனை செய்யப்பட்டனர். குற்றத்தடுப்பு தொடர்பாக இரவு நேரங்களில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 27 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் குற்ற வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பிடியாணை பிறக்கப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் குற்றத்தடுப்பு மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தொடர் சோதனை நடைபெறும் எனவும், வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து வாகன சோதனை செய்யப்படும்.
மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.