மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை: 837 வழக்குகள் பதிவு
கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 837 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தீவிர வாகன சோதனை
கரூர் மாவட்டம் முழுவதும் நேற்றுமுன்தினம் இரவு சிறப்பு ரோந்து பணியாக குற்றத்தடுப்பு மற்றும் வாகன விபத்து குறைப்பது தொடர்பாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுப்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் போலீசார் மூலம் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள், மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மொத்தம் 837 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 19 நம்பர் பிளேட் இல்லாத, போலியான நம்பர் பிளேட் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 60 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
லாட்டரி விற்பனை
இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 20 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் குற்ற வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மாவட்டத்தில் அடிக்கடி பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் பிரச்சினைக்குரிய 15 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். சின்னதாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவரை கரூர் மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவினர் கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றினர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்
குற்றத்தடுப்பு மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தொடர் சோதனை நடைபெறும், வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டும் தொடர்ந்து வாகன சோதனை செய்யப்படும். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் குழந்தைகளை நீர்நிலை பகுதிகளுக்கு தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதை தவிர்த்து விபத்துகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.