நெல்லையில் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்


நெல்லையில் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
x

கடும் கட்டுப்பாடுகளுடன் ‘லியோ’ திரைப்படம் நேற்று வெளியானது. நெல்லையில் தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நடிகர் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நேற்று வெளியானது. தமிழகத்தில் அதிகாலை 4 மணிக்கு 'லியோ' திரைப்படத்தை சிறப்பு காட்சியாக திரையிட அனுமதி மறுக்கப்பட்டதாலும், ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் அனைவராலும் எதிர்பார்ப்புக்கு ஆளானது.

நெல்லை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 'லியோ' திரைப்படம் நேற்று வெளியானது. முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. நெல்லை மாநகரில் 'லியோ' திரைப்படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. தியேட்டர்களுக்கு திரளான ரசிகர்கள் வாகனங்களில் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

நெல்லை சந்திப்பு உடையார்பட்டி ராம்முத்துராம் தியேட்டரில் குவிந்த ஏராளமான ரசிகர்கள் வண்ண காகிதங்களை பறக்க விட்டும், பட்டாசுகளை வெடித்தும், விசில் அடித்தும், மகிழ்ச்சி ஆரவாரத்துடனும் ஆடிப்பாடி உற்சாகமாக கொண்டாடினார்கள்.

போலீசார் தடை

நெல்லையில் 'லியோ' திரைப்படம் வெளியான தியேட்டர்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தியேட்டர் வளாகத்தில் அதிக சத்தத்தை எழுப்பும் டி.ஜே. இசை கருவிகளுடன் பாடல்களை இசைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டி.ஜே. இசைக்கருவிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், அவற்றை அப்புறப்படுத்த போலீசார் அறிவுறுத்தினர்.

இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இசைக்கருவிகளை மினி லாரியில் ஏற்றி வெளியே எடுத்துச்சென்றனர். இசைக்கருவிகளை அகற்றியபோது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மிரளவைக்கும் நடிப்பு

இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில், ''கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான திரைப்படங்களுக்கு பெரிய அளவிலான 'கட் அவுட்' வைக்கப்பட்டது. அப்போது மாநகராட்சி மற்றும் போலீசாரிடம் எந்தவித அனுமதியும் வாங்கவில்லை.

ஆனால் தற்போது உயரமான பேனர் வைக்கவும், இசைக்கருவிகளை பயன்படுத்தவும் போலீசார் தடுக்கிறார்கள். 'லியோ' திரைப்படம் நன்றாக உள்ளது, நடிகர் விஜயின் நடிப்பு மிரள வைத்துள்ளது'' என்றனர்.

கியூஆர் கோடு

தியேட்டர் வளாகத்தில், ரசிகர்களை கவரும் விதமாக 'கியூ ஆர் கோடு' மூலமாக நடிகர் விஜயுடன் நிற்பது போன்று புகைப்படம் எடுத்து அவர்களது செல்போன்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது. ரசிகர்கள் நடிகர் விஜயுடன் நிற்பது போன்று ஆர்வமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

'லியோ' திரைப்படம் வெளியான தியேட்டர்களில் கட்டுப்பாடுகளை கண்காணிக்கவும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் வருவாய் துறை அதிகாரிகள் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டனர்.


Next Story