சேலம் புதிய போலீஸ் கமிஷனராக விஜயகுமாரி பொறுப்பேற்பு


சேலம் புதிய போலீஸ் கமிஷனராக விஜயகுமாரி பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 3 March 2023 7:30 PM GMT (Updated: 3 March 2023 7:30 PM GMT)
சேலம்

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற விஜயகுமாரி தெரிவித்தார்.

போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு

சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த நஜ்முல் ஹோடா சென்னை ஆவடி தலைமையிடம் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றிய விஜயகுமாரி சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

நேற்று காலை விஜயகுமாரி சேலம் லைன்மேடு பகுதியில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார்.

அவரை துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். போலீசாரின் மரியாதையை போலீஸ் கமிஷனர் ஏற்றுக் கொண்டார். அவரை போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பிறகு போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

விரைந்து முடிக்கப்படும்

வாரத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று அதிலுள்ள குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சனிக்கிழமை போலீசாரின் குறைகள் கேட்கப்படும். ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன் அவர்கள் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். போலீசாரின் இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story