விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்


விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
x

புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்தவர் நா.புகழேந்தி. இவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகின.

இந்த சூழ்நிலையில் விழுப்புரம் அருகே வி.சாலையில் நேற்று முன்தினம் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பதால், இந்த கூட்டத்தில் பங்கேற்க புகழேந்தி எம்.எல்.ஏ. முடிவு செய்தார். இதற்காக கடந்த 4-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

நேற்று முன்தினம் மாலை தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அவர் வி.சாலைக்கு வந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு வருவதற்கு முன்பாக மேடையில் ஏறிய புகழேந்தி, அங்கிருந்த கட்சி நிர்வாகிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வணக்கம் தெரிவித்தார்.

ஆனால், மேடையில் உள்ள இருக்கையில் அமரவில்லை. உடல்நிலையை கருதி, அங்குள்ள ஒரு அறையில் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள், புகழேந்தி எம்.எல்.ஏ. வை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி புகழேந்தி எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. புகழேந்தி எம்.எல்.ஏ. மரணம் அடைந்த செய்தி அறிந்ததும் அவரது நெருங்கிய நண்பரான உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

இதையடுத்து புகழேந்தி எம்.எல்.ஏ.வின் உடல், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று இரவு சிதம்பரம் பிரசார கூட்டத்தை முடித்துக்கொண்டு, விழுப்புரம் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது உடல், சொந்த ஊரான அத்தியூர்திருவாதி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் தி.மு.க.வினர், பொதுமக்கள் என ஏராளமானோர் புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், பொதுமக்கள், தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு அதே கிராமத்தில் புகழேந்தி எம்.எல்.ஏ. உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. புகழேந்தியின் இறுதிச்சடங்கில், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story