கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை


கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை
x
சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டக்கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தரைமட்ட குடிநீர் தொட்டி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை குடிநீர் தொட்டி கட்டும் பணியில் மேஸ்திரி ராஜா, உதவியாளர்கள் ஈடுபட்டனர். அதே பகுதியை சேர்ந்த ஒருவர், அவருடைய தங்கை ஆகியோர் தங்கள் வீட்டுக்கு செல்லும் வழியில் குடிநீர் தொட்டி கட்டுவதால் சென்று வர பாதை இருக்காது என கூறி கட்டுமான பணியை நிறுத்த முயன்றனர்.

மேலும் இதுதொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் காட்டுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கூடினர்.

முற்றுகை

பின்னர் அவர்கள் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்ககோரி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ, வருவாய் ஆய்வாளர் ராதா, கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story