ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது


ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
x

விருத்தாசலம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

7 பேரிடம் தலா ரூ.2 ஆயிரம்

விருத்தாசலம் அண்ணாநகர் அருகே உள்ள ஏ.பி. நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 44). இவர் பள்ளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ரூபநாராயண நல்லூரை சேர்ந்த ராமதாஸ் (62) உள்பட 7 விவசாயிகள் தங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை தங்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியனை அணுகினர். அப்போது, அவர், பட்டா மாற்றம் செய்ய ஒருவருக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் 7 பேருக்கும் சேர்த்து மொத்தம் 14 ஆயிரம் ரூபாய் தனக்கு தர வேண்டும் என்று கேட்டார்.

சுற்றிவளைத்து பிடித்தனர்

ஆனால் பணத்தை அவர்கள் கொடுக்க விரும்பவில்லை. இதையடுத்து, ராமதாஸ் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் தேவநாதன், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், சப்- இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியனை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

அதன்படி நேற்று ராமதாசிடம் ரசாயனம் தடவிய ரூ.14 ஆயிரம் பணத்தை கொடுத்தனர். அந்த பணத்தை பள்ளிப்பட்டில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு ராமதாஸ் எடுத்து சென்று, பட்டா பெயர் மாற்றம் செய்து தரக்கோரி, கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியனிடம் வழங்கினார்.

லஞ்ச பணத்தை அவர் பெற்றுக்கொண்ட போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்து சுப்பிரமணியனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து அண்ணாநகர் ஏ.பி. நகரில் உள்ள சுப்பிரமணியன் வீட்டிலும் போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story