ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது


ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது
x

திண்டுக்கல்லில் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வாரிசு சான்றிதழ்

திண்டுக்கல் தோமையார்புரத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 70). இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அவருடைய மனைவி அன்னலட்சுமி, மகன் முருகன் உள்ளிட்டோருக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தனர்.

இதற்கிடையே அடியனூத்து கிராம உதவியாளர் செந்தில்குமார் (41), முருகனை தொடர்பு கொண்டு வாரிசு சான்று தொடர்பாக விசாரணைக்கு வரும்படி அழைத்தார். முருகன் வெளியூரில் இருந்ததால் தனது மகன் கோபிநாகராஜனை அனுப்பி வைத்தார்.

ரூ.2 ஆயிரம் லஞ்சம்

இதையடுத்து கிராம உதவியாளர் செந்தில்குமாரை, கோபிநாகராஜன் சந்தித்தார். அப்போது ரூ.2 ஆயிரம் கொடுத்தால் தான் வாரிசு சான்றிதழ் கிடைக்கும் என்று அவர் கூறியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாகராஜன், கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தத்தை சந்தித்து கேட்ட போது, அவரும் ரூ.2 ஆயிரம் தரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத கோபிநாகராஜன், இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கோபிநாகராஜனிடம் கொடுத்து அனுப்பினர்.

2 பேர் கைது

இதனையடுத்து திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே உள்ள அடியனூத்து கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நேற்று காலை கோபிநாகராஜன், ரசாயன பவுடர் தடவிய பணத்துடன் சென்றார். பின்னர் அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தத்திடம் வாரிசு சான்றுக்கு லஞ்சமாக ரூ.2 ஆயிரத்தை கோபிநாகராஜன் கொடுக்க முயன்றார்.

ஆனால் அவர் பணத்தை வாங்காமல், கிராம உதவியாளர் செந்தில்குமாரிடம் கொடுக்கும்படி கூறினார். அதையடுத்து கோபிநாகராஜன் கொடுத்த பணத்தை, கிராம உதவியாளர் செந்தில்குமார் வாங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு மாறுவேடத்தில் பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் ரூபா, பழனிச்சாமி மற்றும் போலீசார், கிராம உதவியாளர் செந்தில்குமார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். வாரிசு சான்றிதழுக்காக ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story