விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, பெண் உதவியாளர் கைது


விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, பெண் உதவியாளர் கைது
x

பெரம்பலூர் அருகே வீட்டுமனை பட்டா பெயர் மாற்ற விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, பெண் உதவியாளருடன் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

வீட்டுமனை பட்டா பெயர் மாற்ற...

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 75), விவசாயி. இவர் தனது வீட்டுமனை பட்டாவை மகன் லோகநாதன் பெயரில் மாற்றம் செய்ய டி.களத்தூர் கிராம நிர்வாக அதிகாரி தீனதயாளன் (33), கிராம நிா்வாக உதவியாளா் ஈஸ்வரி (39) ஆகியோரை நாடியுள்ளார். அப்போது அவர்கள் வீட்டுமனை பட்டாவை பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என சின்னதுரையிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னதுரை இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் ஆகியோரிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர்.

2 பேர் கைது

அதன்படி சின்னதுரை நேற்று மதியம் 1 மணியளவில் டி.களத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். மேலும் அங்கு பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் போலீசார் அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னதுரை லஞ்ச பணத்தை அலுவலகத்தில் பணியில் இருந்த ஈஸ்வரியிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய ஈஸ்வரி, தீனதயாளனிடம் கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று தீனதயாளன், ஈஸ்வரி ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து லஞ்சமாக பெற்ற ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து அவர்கள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

வாடகை வீட்டில்

கைதான கிராம நிர்வாக அதிகாரி தீனதயாளன் ஈரோடு மாவட்டம், கங்காபுரம், வடக்கு தெருவை சேர்ந்த நடராஜனின் மகன் ஆவார். தீனதயாளன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் டி.களத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பேற்று கொண்டார். இதற்காக தீனதயாளன் திருச்சி மாவட்டம், துறையூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பணிக்கு வந்து சென்றுள்ளார். இதற்கு முன்பு தீனதயாளன் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிந்துள்ளார்.

கிராம நிர்வாக உதவியாளர் ஈஸ்வரி ஆலத்தூர் தாலுகா, மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த பழனியாண்டியின் மனைவி ஆவார். விவசாயிடம் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story