கிராம ஊராட்சி செயலாளர்கள் 3-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்
கிராம ஊராட்சி செயலாளர்கள் 3-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 121 கிராம ஊராட்சிகளில், 10 காலிப்பணியிடங்கள் போக மீதமுள்ள 111 ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக நேற்றும் சம்பளம் பெறாத விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சி மன்றங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும். இணையதளத்தில் வீட்டு வரி விவரங்களை பதிவு செய்யவும், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட இயலாதவர்களின் விவரங்களை கணக்கெடுப்பு செய்வதற்கும் உரிய கால அவகாசம் வழங்கிடவும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம ஊராட்சி செயலாளர்கள் தெரிவித்தனர். 3 நாள் போராட்டம் கழித்து இன்று (வியாழக்கிழமை) கிராம ஊராட்சி செயலாளர்கள் பணிக்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.