ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதை கண்டித்து லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்


ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதை கண்டித்து லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
x

ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

திருவள்ளூர்

வெங்கல்,

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் ஏரியில் திருவள்ளூர் மாவட்ட கனிமவளத் துறை சார்பாக சவுடு மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 28-ந் தேதி முதல் இந்த ஏரியில் லாரிகளில் சவுடு மண் அள்ளப்படுகிறது. இவ்வாறு அள்ளப்படும் சவுடு மண் பல அடி அழத்துக்கு அள்ளப்பட்டதாகவும், இதனால் ஏரிக்கு அருகிலே உள்ள பள்ளி கட்டிடங்கள் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீரென தாமரைப்பாக்கம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர், சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ்குமார் தலைமையில் வருவாய் துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இதன் பின்னர், கிராம மக்கள் குவாரியை உடனடியாக மூடினால் மட்டுமே தொடர் போராட்டத்தை கைவிடுவோம்! என உறுதியுடன் கூறினர். இதனை ஏற்று வருவாய்த்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சவுடுமண் குவாரியை மூட உத்தரவிட்டனர்.

இதனால் ஏரியில் இருந்த லாரிகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. இப்பிரச்சினையால் நேற்று இப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.


Next Story