புறவழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்


புறவழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:46 PM GMT)

கிராமத்திற்கு செல்ல பாதை அமைத்து தரக்கோரி புறவழிச்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

புறவழிச்சாலை விரிவாக்க பணி

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை புறவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்க பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீர்காழி அருகே கொள்ளிடம் முதல் கருவி வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேல செங்கமேடு, நத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இதனால் வரை புறவழிச் சாலையை கடந்துதான் தங்களுடைய கிராமத்திற்கு சென்று வந்தனர். நேற்று மேற்கண்ட கிராமங்களுக்கு செல்லும் பாதையை அடைத்து புறவழிச் சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டது.

இதனை அறிந்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை விரிவாக்க பணியை தடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது நத்தம் கிராமத்திற்கு செல்லும் புறவழிச் சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் அல்லது மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், சீர்காழி தாசில்தார் இளங்கோவன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், சிங்காரவேலன் ஆகியோர் நேரில் சென்று போராட்டக்காரரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

இந்த போராட்டத்தால் 3 மணி நேரம் சாலை விரிவாக்க பணி பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை முன்னிட்டு புறவழிச் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மேல செங்கமேடு கிராம மக்களும் புறவழிச் சாலையில் தங்கள் கிராமத்திற்கு செல்ல சுரங்கப்பாதை அமைத்து தர கோரி சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story