மேம்பாலம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி கிராம மக்கள் போராட்டம்


மேம்பாலம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி கிராம மக்கள் போராட்டம்
x

சேத்தியாத்தோப்பு அருகே உயரம் குறைவாக இருப்பதால் மேம்பாலம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

விரிவாக்க பணி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே நந்தீஸ்வரமங்கலம்- வட்டத்தூர் கிராமத்திற்கு இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த மேம்பாலத்தின் உயரம் 5.5 மீட்டர் இருக்க வேண்டும். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் 4.5 மீட்டர் உயரம் வரை மேம்பாலம் கட்டுவதற்கு கம்பிகள் விட்டிருந்ததாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்த வட்டத்தூர் கிராம மக்கள், பாலம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கிராம மக்கள், பாலத்தின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கக்கோாி வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென மேம்பாலம் கட்டும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கியுள்ளனர். இதுபற்றி அறிந்த கிராம மக்கள், மேம்பாலம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், மேம்பாலம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், கிராம மக்கள் சார்பில் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வேண்டுமானால் பணியை நிறுத்துங்கள், அதுவரை பணி நடைபெறும் என்றனர். இதையடுத்து கிராம மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story