ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இயங்கி வந்தது. வேதாந்தா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வந்த இந்த ஆலை, காப்பர் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைய மிகப்பெரிய பங்காற்றியது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்துக்கு எதிராக நடந்த போராட்டம் காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு இந்த ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில் ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர், ஆலையை விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் மற்றும் பல்வேறு கிராம மக்கள் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை விற்க முடிவை வேதாந்தா குழுமம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் வலியுறுத்தினர்.

நேற்று சோரிஸ்புரம், அய்யனடைப்பு, சில்லாநத்தம், சாமிநத்தம், புதூர் பாண்டியபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், மீளவிட்டான், மடத்தூர், சிலுக்கன்பட்டி ராஜாவின் கோவில், நடுவக்குறிச்சி, சில்லாநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் அந்தந்த கிராமங்களில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேனரை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story