ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்யக்கோரி ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
சித்தரேவு ஊராட்சி செயலாளராக இருந்தவர் சிவராஜன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், மணலூர் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் சிவராஜன் இடமாறுதலாகி செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று சீவல்சரகு அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் இ.பெரியசாமி, கலெக்டர் விசாகன் ஆகியோரிடம் சித்தரேவு ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்யக்கோரி சித்தரேவு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் அவர்கள், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தட்சிணாமூர்த்தியிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்களின் கோரிக்கை குறித்து கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.