கிராம மக்கள் சாலை மறியல்


கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Oct 2023 7:45 PM GMT (Updated: 8 Oct 2023 7:46 PM GMT)

கொடைரோடு அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

கொடைரோடு அருகே ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி காமலாபுரத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 4-ந்தேதி பலத்த மழை பெய்தது. அப்போது காமலாபுரத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. இதனால் மின்தடை ஏற்பட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போல சக்கையநாயக்கனூர் பகுதியிலும் அடிக்கடி மின்தடையால் குடிநீர் வினியோகம், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று திரண்டு வந்து மதுரை -பழனி சாலையில் காமலாபுரத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேக் அப்துல்லா, கருப்பையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் குடிநீர் மின்வினியோகம் சீராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன் பிறகு மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story