கிராம மக்கள் சாலைமறியல்


கிராம மக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 14 July 2022 6:45 PM GMT (Updated: 14 July 2022 6:45 PM GMT)

மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

மின்மயானம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி சாலையில் கொத்தூரை அடுத்த அரசு புறம்போக்கு நிலத்தில் பொது மயானம் உள்ளது. அந்த இடத்தில் மின் மயானம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை அறிந்த கொத்தூர், உச்சனப்பள்ளி, நொகனூர் கிராம மக்கள் நேற்று மதியம் கொத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எங்கள் கிராம பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் மின் மயானம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். கொட்டும் மழையில் குடைபிடித்து சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார் குருநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

அப்போது, எங்கள் முன்னோர்களின் சமாதிகளை இடித்து விட்டு மின்மயானம் அமைக்க கூடாது என்று கூறினர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதைதொடர்ந்து தாசில்தார் குருநாதன், தாலுகா அலுவலகத்தில் நாளை (அதாவது இன்று) பேச்சுவார்த்தை நடத்தி மின்மயானம் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். இதைதொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story