கடையம் அருகே கல்குவாரியை கிராம மக்கள் முற்றுகை


கடையம் அருகே கல்குவாரியை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 6:46 PM GMT)

கடையம் அருகே கல்குவாரியை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

கடையம்:

கடையம் யூனியன் மடத்தூர் பஞ்சாயத்து வள்ளியம்மாள்புரத்தில் இருந்து பாப்பான்குளம் செல்லும் சாலையிலும், கடையம் சாலை அருகிலும் கல்குவாரிகள் உள்ளன. இந்த கல்குவாரிகளில் பாறைகளை வெடி வைத்து தகர்க்கும்போது விவசாய நிலங்களில் கற்கள் தெறித்து விழுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் கல்குவாரிகளில் இருந்து வெளியேறும் தூசுக்களால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், கருவுற்ற பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதாகவும் பொதுமக்களுக்கு குற்றம் சாட்டினர்.

கல்குவாரிகளில் வெடி வைக்கும்போது மாணவர்கள் அந்த வழியாக அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று பஞ்சாயத்து தலைவர் முத்தமிழ்செல்வி ரஞ்சித் தலைமையில், வள்ளியம்மாள்புரத்தில் இருந்து கடையம் சாலை அருகில் உள்ள கல்குவாரியை முற்றுகையிட்டனர்.

உடனே கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், வருவாய் ஆய்வாளர் சுந்தரலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் அன்னலட்சுமி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்குவாரிகளை மூட வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின்பேரில், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story