போக்குவரத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


போக்குவரத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Aug 2023 8:30 PM GMT (Updated: 28 Aug 2023 8:30 PM GMT)

பெம்பட்டிக்கு இயக்கப்படும் அரசு பஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து ஊட்டி போக்குவரத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி

பெம்பட்டிக்கு இயக்கப்படும் அரசு பஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து ஊட்டி போக்குவரத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம மக்கள் முற்றுகை

ஊட்டி அருகே இத்தலார் அடுத்த பெம்பட்டி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் ஊட்டியில் இருந்து காலை 10 மணி, மாலை 4.30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிரமமாக இருப்பதால், கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே இயக்கப்பட்டு வந்த 2 பஸ்களும் கடந்த 4 மாதமாக சரிவர இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக மாலையில் அரசு பஸ் இயக்காமல் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் பணி மற்றும் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் பெம்பட்டி கிராம மக்கள் அவதியடைந்தனர். இந்தநிலையில் நேற்று பெம்பட்டிக்கு இயக்கப்படும் அரசு பஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து ஊர் தலைவர் ஆரி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஊட்டி போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அரசு பஸ்

அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

பெம்பட்டிக்கு அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தலார் வரை மட்டும் பஸ் வந்து விட்டு, அங்கிருந்து ஊட்டிக்கு திரும்புகிறது. இதனால் அங்கிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் 3 கி.மீ. தூரம் வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பெம்பட்டி கிராமத்திற்கு சரியான நேரத்தில் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஊட்டி போக்குவரத்துக்கழக மண்டல பொது மேலாளர் நடராஜன் கூறுகையில், இன்று (அதாவது நேற்று) மாலை முதல் பெம்பட்டிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இனிமேல் தினமும் வழக்கம் போல் பஸ் இயக்கப்படும் என்றார்.


Next Story