சாலை-கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி விசுவக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


சாலை-கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி விசுவக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x

சாலை-கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி விசுவக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டா் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, விசுவக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலர் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், விசுவக்குடி முதல் தெருவில் பழுதடைந்து காணப்படும் தார் சாலைக்கு பதிலாக இருபுறமும் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும். விசுவக்குடி 3-வது தெருவில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். 4-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

தீ வைத்த சம்பவம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் தலைமையில் அச்சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சங்கத்தின் உறுப்பினரான குன்னம் தாலுகா, பென்னக்கோணம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வத்தை கடந்த மாதம் 7-ந்தேதி இரவு மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் தீக்காயமடைந்த செல்வம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், அந்த நபா் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார். அந்த நபரையும் கைது செய்யவும், பென்னக்கோணத்தை சேர்ந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தனர்.

ஆக்கிரமிக்க முயற்சி

பெரம்பலூர் தாலுகா, ஆலம்பாடி பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், ஆலம்பாடி கிராமத்தில் கீழக்கரை என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் புதிதாக கசிவு நீர் பண்ணை குட்டை 100 நாள் வேலை தொழிலாளர்கள் மூலம் வெட்டப்பட்டு வந்தது. ஆனால் குட்டை வெட்டும் இடம் எங்களுக்கு சொந்தமானது என்று கூறி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உள்பட 2 பேர் சேர்ந்து அந்த குட்டையை மூடி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர். எனவே அந்த 2 நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் கசிவு நீர் பண்ணை குட்டை வெட்டி பொதுமக்கள், விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

அரசலூரை சேர்ந்த ஒருவர் கொடுத்த மனுவில், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னமங்கலம் கிராம ஊராட்சிக்கு அரசால் நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பணிக்கு வராமல், ஊதியம் பெற்று வருகின்றனர். அவர்கள் மீதும், அவர்களுக்கு ஊதியம் வழங்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

மயானத்தில் ஆக்கிரமிப்பு

குன்னம் விஸ்வகர்மா ஐந்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், குன்னத்தில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு தனியாக மயானம் வசதி உள்ளது. மயான மேடையின் அருகே உள்ள பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கும், எரிப்பதற்கும் இடையூறு ஏற்படுகிறது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், மயானத்தில் ஊராட்சி நிா்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட குப்பை கிடங்கையும் அகற்ற வேண்டும். மயானம் அருகே குட்டை போன்று உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 267 மனுக்கள் பெறப்பட்டன.


Next Story