வெடிமருந்து ஆலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


வெடிமருந்து ஆலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x

பழனி அருகே வெடிமருந்து ஆலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திண்டுக்கல்

வெடிமருந்து ஆலை

பழனி அருகே தாதநாயக்கன்பட்டி கிராம பகுதியில் வெடிமருத்து ஆலை அமைக்க தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பாப்பம்பட்டி, கரடிக்கூட்டம், சித்திரைக்குளம், தாதநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் வெடிமருந்து ஆலை அமைப்பது தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் நெய்க்காரப்பட்டி அருகே தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பாப்பம்பட்டி, தாதநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ஜ.க. மற்றும் விவசாய சங்கத்தினர், இயற்கை ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நிலம், நீர், காற்று மாசு

கூட்டத்தின்போது ஆலை அமைய உள்ளது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது பொதுமக்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆலை அமைய உள்ள இடத்துக்கு அருகே புராதன இடமான ஐவர்மலை, கோவில்கள், விவசாய நிலம் ஆகியவை உள்ளது.

இதுமட்டுமின்றி இந்த இடத்தில் ஆலை அமைந்தால் நிலம், நீர், காற்று மாசடைந்து எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே ஆலை அமைக்க கூடாது என வலியுறுத்தினர். மேலும் ஆலை அமைய எதிர்ப்பு தெரிவித்து மனுக்களையும் அளித்தனர்.

சலசலப்பு

முன்னதாக கருத்துகேட்பு கூட்டம் குறித்து ஆலை அமையவுள்ள ஊராட்சி பகுதியில் போதிய அறிவிப்பு செய்யப்படவில்லை என்றும், பழனி ஒன்றிய பகுதியில் நடத்தாமல் தொப்பம்பட்டி ஒன்றிய பகுதியில் நடத்துவதாகவும், கூட்டத்துக்கு வெளியூர் ஆட்களை அழைத்து வந்ததாக கூறி அரசியல் கட்சியினர் அதிகாரிகளிடம் புகார் கூறினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே பாதுகாப்பு பணியில் இருந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து கூட்டம் நடைபெற்றது.


Next Story