ரெயில்வே சுரங்கப்பாதையால் பீதிக்குள்ளாகும் கிராம மக்கள்


ரெயில்வே சுரங்கப்பாதையால் பீதிக்குள்ளாகும் கிராம மக்கள்
x

ரெயில்வே சுரங்கப்பாதையால் பீதிக்குள்ளாகும் கிராம மக்கள்

தஞ்சாவூர்

தஞ்சை அருகே சிவகாமிபுரம்- வண்ணாரப்பேட்டை இடையே அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே சுரங்கப்பாதையால் அந்த பகுதி கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். மழைதண்ணீர் அடிக்கடி தேங்குவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே கீழ்பாலம்

தஞ்சை- திருச்சி இடையேயான ரெயில்வே வழித்தடத்தில் தஞ்சை மாநகரம் மற்றும் தஞ்சை அருகே உள்ள பகுதிகளில் பல இடங்களில் ரெயில்வே கீழ்பாலம் போடப்பட்டுள்ளது. குறிப்பாக தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் ரெயில்வே கீழ்பாலம், சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் ரெயில்வே கீழ்பாலம், சிவாஜி நகர் பகுதியில் கீழ்பாலம், சீதாநகரில் ரெயில்வே கீழ்பாலம் உள்ளது. இன்னும் பல இடங்களில் சிறிய அளவிலான ரெயில்வே கீழ்பாலங்கள் உள்ளன.

இந்த பகுதியில் சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கி விடுகிறது. பெரிய மழை என்றால் கேட்கவா வேண்டும். சில இடங்களில் ஒரு வாரத்திற்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் மட்டும் தேங்கும் தண்ணீர் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுகிறது. மற்ற இடங்களில் உடனே அப்புறப்படுத்தப்படுவதில்லை. அடைமழை காலங்களில் மாதக்கணக்கில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

சுரங்கப்பாதை

அந்த வகையில் தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டை அருகே ரெயில்வே வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை- சிவகாமிபுரத்தை இணைக்கும் வகையில் இந்த ரெயில்வே சுரங்கப்பாதை 300 மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டு 1½ ஆண்டுகள் ஆகின்றன. இந்த சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்த வழியாக பஸ் போக்குவரத்தும் உள்ளது. மேலும் மருத்துவக்கல்லூரிக்கு, தஞ்சைக்கு, வல்லத்திற்கு வருவதற்கும், அதே போன்று இங்கிருந்து அந்த பகுதிகளுக்கு செல்வதற்கும் பொதுமக்கள் இந்த வழியைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். சுரங்கப்பாதை அமைப்பதற்கு முன்பு இந்த பகுதியில் ரெயில்வே கேட் இருந்தது. அதன் பின்னர் கேட் அகற்றி விட்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

இரவு நேரங்களில் அச்சம்

பகலில் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தும் மக்கள் மாலை 5 மணிக்குப்பிறகு சுரங்கப்பாதையை பயன்படுத்துவதில்லை. காரணம் அதில் ஒரு மின் விளக்குகள் கூட இல்லை. இதனால் சுரங்கப்பாதை 5 மணிக்குப்பிறகு இருள் சூழ்ந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

மேலும் சாதாரண மழைக்கே இந்த சுரங்கப்பாதையினுள் தண்ணீர் தேங்கி விடுகிறது. தற்போது கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்த காரணத்தால் சுரங்கப்பாதையில் 3 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி உள்ளது.மேலும் அருகில் வயல்வெளிகள் இருப்பதால் தண்ணீர் எளிதில் தேங்குகிறது. தண்ணீர் தேங்கினால் இந்த பகுதியில் போக்குவரத்தும் தடை படுகிறது.

பஸ் இயங்கவில்லை

2 நாட்களாக பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் வண்ணாரப்பேட்டை வழியாகவும், புறவழிச்சாலை வழியாகவும், ஆலக்குடி வழியாகவும் சுற்றி சென்றவண்ணம் உள்ளனர். மேலும் தஞ்சையில் இருந்து சிவகாமிபுரம் வழியாக வண்ணாரப்பேட்டைக்கு பஸ் தினமும் 5 முறை சென்று வருகின்றன. இந்த பஸ் மழை காலங்களில் வண்ணாரப்பேட்டைக்கு செல்வதில்லை. காரணம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் வண்ணாரப்பேட்டை வந்து திரும்பி செல்கிறது.

நேற்றும் தண்ணீர் தேங்கி கிடந்ததால் பஸ் மட்டுமல்ல, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்லவில்லை. நடந்து செல்லும் பொதுமக்கள் வயல் வெளி வழியாகத்தான் சென்று வந்தனர். மேலும் இங்கு தேங்கிய மழைநீரையும் உடனடியாக அப்புறப்படுத்துவதில்லை. இதனால் வாரக்கணக்கில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.


Next Story