சதுரங்கப்பட்டினத்தில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு


சதுரங்கப்பட்டினத்தில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு
x

சதுரங்கப்பட்டினத்தில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செங்கல்பட்டு

குடிசைகளை அகற்ற முயன்றனர்

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் வீட்டுமனை இல்லாத ஏழை-எளிய மக்கள் மற்றும் வாய் பேச முடியாத, கால் ஊனமுற்ற மாற்று திறனாளிகள் என 14 பேர் சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஊராட்சி மன்றத்தின் அனுமதியுடன் சதுரங்கப்பட்டினம்-சோலைவகுப்பம் இணைப்பு சாலையில் கிராம நத்தம் பகுதியில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் சதுரங்கப்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை கடிதமும் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் நேற்று திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி தலைமையில் பொக்லைன் வாகனத்துடன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்த வருவாய்துறை அதிகாரிகள் 14 குடிசைகளையும் அகற்ற முயன்றனர்.

மறியல்

இதனால் அதிர்ச்சியடைந்த குடிசைவாசிகள் ஊராட்சி மன்றத்தின் அனுதியுடனேயே அரசின் விதிமுறைகளை பின்பற்றி தாங்கள் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருவதாகவும், குடிசைகளை அகற்ற வருவது குறித்து முன் கூட்டியே தங்களுக்கு எந்தவித கடிதமும் வழங்கவில்லை என்று புகார் கூறி குடிசைகள் அகற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிசைகளை அகற்ற வந்த பொக்லைன் எந்திரம் முன்பு தரையில் படுத்து கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலர் குடிசைகளை அகற்றாதீர்கள் என்று கெஞ்சி தரையில் உருண்டு, அதிகாரிகளின் காலை பிடித்து அழுதனர். பிறகு குடிசைவாசிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும், அ.தி.மு.க.வினரும் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்படவே சதுரங்கப்பட்டினம் போலீசார் பொக்லைன் எந்திரம் முன்பு படுத்து மறியலில் ஈடுபட்ட குடிசை வாசிகளையும், அவர்களுக்கு ஆதரவாக வந்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களையும் அமைதிபடுத்தினர்.

பேச்சுவார்த்தை

சதுரங்கப்பட்டினம் போலீசார் முன்னிலையில் திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரியிடம் குடிசைவாசிகள் சார்பில் செங்கல்பட்டு மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆறுமுகம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் தனபால், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன், சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மன்றதலைவர் ரேவதிசாமிநாதன் ஆகியோர் பேச்சுவார்ததை நடத்தினர். பிறகு குடிசைவாசிகள் முறைப்படி பட்டா வழங்க வழங்க வேண்டும் என்று கோரி மனு அளிக்குமாறும், பிறகு பரிசீலனை செய்து பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதி அளித்தார்.

பிறகு குடிசைவாசிகள் அவரது சமாதானத்தை ஏற்று மறியலை கைவிட்டு அனைவரும் தாசில்தாரிடம் பட்டா வழங்க கோரி மனு வழங்கினர். பிறகு பட்டா வரும் வரை தற்காலிகமாக தாங்களாகவே குடிசைகளை அகற்றி கொள்வதாக குடிசைவாசிகள் 14 பேரும் வருவாயத்துறையினரிடம் கூறினர். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் குடிசைகள் அகற்றும் திட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story