ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x

கே.வி.குப்பம் அருகே பொது வழியில் முள் கம்பி வேலி அமைக்கப்பட்டதை கண்டித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அருகே பொது வழியில் முள் கம்பி வேலி அமைக்கப்பட்டதை கண்டித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுைக

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா நாகல் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த பொது வழியை, ஊராட்சி நிர்வாகம் முள்கம்பி வேலி அமைத்துத் தடை செய்து விட்டது. அப்போது விவசாய பயிர் பாசனத்துக்காக தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.

பொது வழி அமைத்துக் கொடுத்து, உடைக்கப்பட்ட குழாய்களை மீண்டும் அமைத்துத் தர வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் நாகல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

வேறு வழியில்லை

நாங்கள் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த பொது வழியை முள் கம்பி வேலி போட்டு அடைத்து விட்டனர். இந்தப் பகுதியில் கரியகவுண்டர்பட்டி, அருந்ததி காலனி, அப்பாத்திபட்டி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வழியாக இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்தது.

இப்பகுதியில் பனந்தோப்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து தான் விளைநிலங்களில் உற்பத்தியாகும் வேளாண் பொருட்களை வியாபாரத்துக்கு கொண்டு சென்று வருகிறோம். விவசாய பணிக்காக டிராக்டர், ஏர் கலப்பை போன்றவற்றை இந்த வழியாகத்தான் கொண்டு செல்ல முடியும். இதற்கு வேறு வழி இல்லை.

பாதை வசதி

இந்தநிலையில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வழியை மறித்து முள்கம்பி வேலி அமைக்கப்பட்டதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பத்து விவசாய குடும்பங்களுக்கு நீர் பாசனத்துக்காக பூமிக்கடியில் புதைக்கப்பட்டு இருந்த தண்ணீர் குழாய்களை உடைத்து விட்டனர்.

அந்தப் பகுதியாக டிராக்டர் செல்லவும், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லவும் வசதியாக எங்களுக்கு அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் 61 சென்ட் நிலத்தில் எட்டு அடி அகலத்தில் பாதை வசதியை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும். இதன் பக்கத்தில் அரசுக்கு சொந்தமாக உள்ள இடங்களுக்கு முள்கம்பி வேலி அமைக்காமல் இருப்பதை நாங்கள் கேட்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனிநபர்கள் பிடியில் இருந்து

இது குறித்து ஊராட்சி மன்றம் சார்பில், கோர்ட்டு உத்தரவுபடி இந்த நிலத்தை நாங்கள் வருவாய்த் துறையினர் மூலம் அளவீடு செய்து தனி நபர்கள் பிடியில் இருந்து மீட்டு, முள்வேலி அமைத்துள்ளோம், என்றனர்.


Next Story