குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம்
மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முள்வேலி அமைப்பு
திருமயம் ஒன்றியம் நெய்வாசல் ஊராட்சியை சேர்ந்த நல்லூர், சீராத்தங்குடி கிராமங்களில் வீரமா காளியம்மன், சங்கிலி கருப்பர் கோவில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில்கள் அருகே மானிய நிலம் உள்ளது. சிராத்தங்குடியில் இறந்தவர்களின் உடல்களை இந்த மானியம் நிலம் வழியாக மயானத்துக்கு எடுத்து செல்வது வழக்கம்.
கடந்த மாதம் கோவில் நிலத்தில் முள்வேலி அமைத்து ஒரு தரப்பினர் அடைத்து விட்டனர். இதனால் அப்பகுதியில் இறந்த ஒரு முதியவரின் உடலை மயானத்துக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்
இதையடுத்து, போலீசார், வருவாய்த்துறையினர், இந்து சமய அறநிலையத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வேலியை அகற்றி இறுதி ஊர்வலம் செல்ல நடவடிக்கை எடுத்தனர். அதன் பின்னர் மீண்டும் கம்பிவேலி அமைக்கப்பட்டது. இதை அகற்றவும், மயானத்துக்கு செல்ல நிரந்தர வழி அமைத்து தர வலியுறுத்தியும் கிராம தலைவர் அழகப்பன் அம்பலம் தலைமையில் 250-க்கும் மேற்பட்டோர் திருமயம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து சாதி சான்றிதழை திரும்ப ஒப்படைப்பதாக கூறி தாசில்தார் பிரவீனா மேரியிடம் மனு அளித்தனர்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுவாமி முத்தழகு, வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன், ஆணையர் சங்கர், இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் நல்லூர் நடுநிலைப் பள்ளிக்கு வந்து பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் மயானத்துக்கு செல்லும் வழியை திறந்து விட வேண்டும். மயானத்துக்கு செல்ல நிரந்தர பாதை ஒதுக்கி ஆர்.டி.ஓ. உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.