காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்


காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
x

புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

கடலூர்

கடலூர்

காலி குடங்களுடன் போராட்டம்

கடலூர் அருகே உள்ள சேடப்பாளையம் சின்னகாரைக்காடு கிராம மக்கள் நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், எங்கள் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரை சுற்றி சிப்காட் வளாகம் அமைந்துள்ளதால், நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்துள்ளது. அந்த தண்ணீரை கைப்பம்பில் பிடிக்கும் போது ரசாயன நாற்றமும், உப்புநீரும் கலந்து வருகிறது.

மஞ்சள் நிறமாகும் உணவு

அதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்த தண்ணீரால் சமைத்தால் உணவு, மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து, தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனு அளியுங்கள், அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story