வில்லேந்தி வேலவர் அம்புவிடும் நிகழ்ச்சி


வில்லேந்தி வேலவர் அம்புவிடும் நிகழ்ச்சி
x

வில்லேந்தி வேலவர் அம்புவிடும் நிகழ்ச்சி நடந்தது.

அரியலூர்

தா.பழூர்:

சிறப்பு பூஜைகள்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்று வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களில் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாடப்பட்டது. இதில் தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் விஜயதசமியையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விஜயதசமியன்று வழக்கமாக அம்மன் துர்க்கை அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் முருகப்பெருமான் வில் ஏந்திய கோலத்தில் காட்சி தருவதால், அம்மனுக்கு பதிலாக வேலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு வில்லேந்திய வேலவர் அலங்காரம் செய்யப்பட்டு, மங்கல ஆரத்தி நடைபெற்றது.

அசுரனை வதம் செய்யும்...

பின்னர் புதிதாக செய்யப்பட்ட சிவப்புக்குதிரை வாகனத்தில் வில்லேந்திய வேலவர் போர்க்கோலம் தரித்து எழுந்தருளினார். பல்வேறு பதிகங்கள் பாடி பக்தர்கள் ஆராதனை செய்தனர். மங்கல இசை முழங்க வேதபாராயணம் செய்யப்பட்டு பிரகார பிரதட்சனம் நடைபெற்றது. தொடர்ந்து ராஜ வீதிகளில் முருகப்பெருமானின் வீதி உலா காட்சி நடைபெற்றது. கிழக்கு வீதியில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் முருகப்பெருமான் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முருகப்பெருமானின் கையில் இருந்த வில்லை பெற்று கோவில் அர்ச்சகர் செந்தில், எட்டு திசைகளிலும் அம்பு எய்தி அசுரனை வதம் செய்த காட்சி நடத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை செய்தனர். பின்னர் கோவிலில் விடையாற்றி உற்சவம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வராகி அம்மன்...

இதேபோல் நாயகனை பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்க சகாயேஸ்வரர் கோவிலில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மரகதவல்லி தாயாருக்கு வராகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.


Next Story