விழுப்புரம்: காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 தொழிலாளர்கள் பலி...!

விழுப்புரம் அருகே காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விழுப்புரம்,
கடலூர் மாவட்டம் கரும்பூர் கிராமத்தை சேர்ந்த பட்டுரோஜா (வயது 55), எனதிரிமங்கலத்தை சேர்ந்த ராமமூர்த்தி(45), சின்னகுச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளவரசன் (34) ஆகிய 3 பேரும் இன்று அதிகாலை புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள பகண்டை என்ற கிராமத்திற்கு கரும்பு வெட்டும் பணிக்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்த வளவனூரில் உள்ள ஆயில் மில் பஸ் நிறுத்தம் அருகே அதிகாலை 5.50 மணியளவில் சென்றபோது திடீரென காட்டுப்பன்றி ஒன்று சாலையின் குறுக்கே அங்கும், இங்குமாக ஓடிக்கொண்டிருந்தது. இதில் அந்த காட்டுப்பன்றியின் மீது எதிர்பாராதவிதமாக அவர்களது மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இவர்களில் பட்டுரோஜாவும், ராமமூர்த்தியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இளவரசன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்த காட்டுப்பன்றியும் செத்தது.
இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும் மற்றும் வளவனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், விபத்தில் படுகாயமடைந்த இளவரசனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.